Wednesday, August 29, 2007

ஷேக் ஸயத் பின் சுல்தான் அல் நஹ்யான்- மறைந்த இதிகாசம்: ஒரு நினைவாஞ்சலி - ஆசிப் மீரான்

ஐக்கிய அரபு அமீரகம் என்ற இந்தச் சிறிய நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட காலத்தில் அபுதாபியின் ஷேக்காக இருந்த ஸயத் அவர்களின் முயற்சியால் துபாய், சார்ஜ¡, அஜ்மான், உம்-அல்-குய்வான், ·பு¨ஜரா ஆகிய பல்வேறு அரபு வம்ச ஷேக்குகளின் தலைமையின் கீழ் சிதறிக் கிடந்த சிறுநிலக் கூட்டங்கள் ஒன்றிணைந்தது. 1972-ஆம் ஆண்டு பெப்ரவரியில் ராஸ்-அல்-கைமாவும் சேர்ந்து கொள்ள ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்பாக ஐக்கிய அரபு அமீரகம் 72, டிசம்பரில் உருவானது.அன்று முதல் கடந்த செவ்வாய் இரவு 7:30 மணியளவில் மறையும் வரை அமீரகத்தின் அதிபதியாக இருந்து ஒரு தேசம் எவ்வாறு உருவாக வேண்டுமென்று கனவு கண்டு செயல்திட்டங்கள் வரைந்து அதை நிறைவேற்றவும் பாடுபட்ட ஒரு தலைவனின் மறைவில் அமீரகம் இப்போதும் துக்கத்துடன் இருக்கிறது.

அறுபதுகளின் இறுதியில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு முன்பு வரை, வெறும் பாலை நிலங்களின் அதிபர்களாக இருந்தவர்கள், பெட்ரோல் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் செல்வச் சீமான்களாக உலா வரும் கால கட்டத்தில் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு தேசம் உருவாகத் திட்டமிடுவது என்பதே சீரிய சிந்தனை மற்றும் தெளிவான அணுகுமுறையால் மட்டுமே முடிந்திருக்கக் கூடிய செயல். அந்தச் சீரிய சிந்தனை மற்றும் தெளிவான அணுகுமுறை, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் அமீரகத்துக் குடிமக்களை மட்டுமல்லாமல், இங்கே வசிக்கும் பிற நாட்டவரையும் வசீகரித்தவர்தான் ஷேக் ஸயத்.பாலை நிலங்களில் ஈச்சை மரங்கள் நட்டு, கழுதைகளின் முதுகில் தோல் பை மூலமாக பல மைல்கள் தண்ணீர் சுமந்து கொண்டிருந்த, நாள்கணக்கில் கடும்பாலையில் ஒட்டகங்களோடு பயணம் செய்து பிற நாடுகளோடு வணிகம் மேற்கொண்டிருந்த, மீன் பிடித்தல் மற்றும் முத்துக் குளித்தலை மட்டுமே தலையாய தொழிலாகக் கொண்டிருந்த மக்களின் அதிபதியாக ஷேக் ஸயத் அதிபதியாகப் பதவியேற்றது அம்மக்களின் நல்லூழ் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெட்ரோல் கண்டுபிடிப்புக்குப் பின்னர் ஏராளமாகப் பணம் புழங்கும் காலகட்டத்தில், ஏனென்று எதிர்கேள்வி கேட்க இயலாத ஒரு தேசத்தில் கிடைத்த வருமானத்தைத் தேசத்தின் நலனுக்காக ஒதுக்குவதும், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணம் சுயநலவாதிகளின் பைகளில் ஒதுங்கி விடாமல் தொடர் கண்காணிப்பு செய்வதும், தேச நலனுக்கான பணிகளில் அயல்நாட்டவரை ஈடுபடுத்தி அவர்களின் மூளையில் விளைந்த நல் திட்டங்களை தேசத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதிலும் ஷேக் ஸயத் காட்டிய உன்னதமான ஈடுபாட்டைத்தான் இன்றைக்கு 30 ஆண்டுகளில் இந்த நாடு பெற்றிருக்கும் அபாரமான வளர்ச்சி காட்டுகிறது.பெட்ரோல் வழியாகப் பணம் ஒழுகிக் கொண்டிருக்கும் வேளையிலும் பாரம்பரியத் தொழில்களுக்கான ஆதரவை அவர் நிலைநிறுத்தத் தவறவில்லை.

"என்றைக்குமே இவன் தான் நமது உண்மையான நண்பன்" என்று ஷேக் ஸயத் சுட்டிக்காட்டியிருந்தது பேரீச்சை மரங்களைத்தான். அதனால்தான், அபுதாபி, அல்-அய்ன் நகரச் சுற்று வட்டாரங்களில் நீர்நிலைகளைக் கண்டறிந்து வளமான ஈச்சை மரச்சோலைகளை நிறுவச் செய்தார். அல்-அய்ன் நகரத்திலும், அபுதாபி எமிரேட்டிலுமாக சுமார் 15 மில்லியன் மரங்கள் நடப்பட்டிருப்பதிலிருந்து ஷேக் ஸயதின் இயற்கை மீதான அபிமானத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.மன்னராட்சி என்ற போதும் குடிகளுக்குக் குறை வராமலிருக்க வேண்டுமென்பதில் ஷேக் ஸயத் கொண்டிருந்த அணுகுமுறைதான், எங்கு சென்றபோதும் அவரைப் புன்னகையோடும் திறந்த மனதோடும் அமீரகவாசிகள் வரவேற்பதற்குக் காரணமாக இருந்தது என்றால் மிகையல்ல.

குடிமக்களிடம் அவர்களது குறைகளைக் கேட்டறியவும், கேட்டறிந்தவைகளுக்கு உடனடி நிவாரணம் தரவும் அவர் என்றுமே தவறியதில்லை என்பதால் அவரை மக்கள் மனதார நேசித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.அரபு நாடுகளில் தலைவர்களுக்கிடையே ஒற்றுமை என்பது உலகறிந்த விஷயமாக இருந்தபோதிலும், "அரபு நாடுகளில் அறிவில் முதியவர்" என்ற பெயருடன் நடமாடிய ஷேக் ஸயதின் பேச்சுக்குப் பெருமதிப்பு இருந்ததிலிருந்து அவரது ஆளுமையும், அரபு உலக்ததில் அவருக்கிருந்த உயர்ந்த நிலையும் நமக்குப் புலனாகும். இராக் பிரச்னையாக இருந்தாலும் சரி, பாலஸ்தீனியப் பிரச்சனையாக இருந்தாலும் சரி; ஷேக் ஸயதின் தெளிவான அணுகுமுறைகள் அமீரகத்திற்கே நற்பெயரைச் சம்பாதித்துத் தந்திருக்கின்றன. அரபு உலகத்தோடு நெருக்கத்தை உருவாக்கிக் கொண்ட அதே வேளையில் மேற்கு நாடுகளை ஒரேயடியாக ஒதுக்கியும் விடாமல் இணக்கமான அணுகுமுறையை உருவாக்கிக்கொண்டது ஷேக் ஸயதின் ராஜதந்திரத்தின் அடையாளம்.

இராக்கில் அமெரிக்கா அத்துமீறி நுழைந்ததன் பின்னர் அங்கு இராக்கிய மக்களுக்கான மருந்துப் பொருட்களையும், அடிப்படை உதவிக்கான பொருட்களையும் ஏற்றிக் கொண்டு பறந்து சென்ற முதல் விமானம் அமீரகத்திலிருந்துதான் சென்றது என்பது ஷேக் ஸயதின் தாராள மனதிற்கு உதாரணம். அமீரகத்தில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் ஷேக் ஸயதின் பெயரால் சாலைகளும், பாலங்களும், பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டிருப்பதும் அவரது கொடை உள்ளத்தின் சான்றுகள்.இதையெல்லாம் விட அவரது ராஜ தந்திரத்தின் இன்னொரு பகுதியாகக் கருதப்படுவது, அமீரகத்தின் ஆட்சியாளர்களிடையே சுமுக உறவிற்கு அவர் இட்ட பாலம். முறையான உச்சமன்றக் குழுவை உருவாக்கி அதன் மூலம் ஆட்சி அதிகாரங்களைப் பரவலாக்கியதன் மூலம் தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் தான் இல்லாத நிலையிலும் தேசம் தான் வகுத்த வழியில் பயணிக்க வேண்டும்மென்ற அவரது கனவு இன்று நனவாகிறது.கிட்டத்தட்ட 130க்கும் அதிகமான பிற தேசத்து மக்கள் இன்று இந்நாட்டில் சுமுகமாகப் பணியாற்றுவதற்கும், நிம்மதியுடன் வாழ்வதற்கும் கூட ஷேக் ஸயத்தின் மனிதாபிமான எண்ணங்கள்தான் காரணம்.

ஐம்பதுகளில் மேலை நாடுகளில் பயணம் செய்தபோது அங்கே அவர் கண்ட காட்சிகள்தான் அவரது மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலை நாடுகளில் மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் தனது நாட்டிலும் தன் மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று உளமாற விரும்பினார் அவர். ஆக்வேதான், தனது தேசத்தின் ஆதாரங்களைத் தன் மக்களின் நலனுக்காக முதலீடு செய்து அதனை இன்று அம்மக்களே அறுவடை செய்ய வழி வகுத்தவர் அவர்.முப்பது ஆண்டுகள் என்பது ஒரு தேசத்தின் சரித்திரத்தில் மிகக் குறைந்த காலம்தான். ஆனால், இந்த முப்பதாண்டுகளில் இந்த தேசம் கண்டிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி வெறும் எண்ணெய் வளத்தால் வந்தது என்று யாரேனும் எண்ணினால அதுபோல இமாலயத் தவறு எதுவும் இருக்க முடியாது.தன் தேசத்தையும் தன் மக்களையும் நேசித்த ஒரு தலைவனின் தொலைதூரப் பார்வை அது. "மாற்றங்கள் வரும்போது அவைகளை நண்பனாக ஏற்றுக் கொள். அல்லது அம்மாற்றங்களே உனக்குக் கொடிய எதிரியாகிவிடும்" என்ற உண்மையை உள்வாங்கி கொண்ட ஓர் அதிபனின் கடுமையான உழைப்பின் பின்னணி அது.

நவீன உலகிற்கேற்ப மாறிக்கொண்டபோதும் தனது பாரம்பரியத்தை விட்டு விடாமல் கட்டிக்காத்த மண்ணின் மைந்தனின் கனவு அது. மேற்கத்திய நாடுகளின் அரசியல் கோட்பாடுகளையோ, அரசியலின் ஆதாரப் புத்தகங்களையோ புரட்டாமல் தனது மக்களின் தேவையையே தனது அரசியல் நிலைப்பாடாக மாற்றிக் கொண்ட ஒரு உன்னதமான மனதிற்கு இறைவன் கொடுத்த அருட்கொடையும் கூட.இத்தகைய ஒரு தலைவனை இழந்து நிற்கும் அமீரகத்திற்கும், அமீரக மக்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்கள்!! ஒரு தேசத்தை உருவாக்கி வழி நடத்தி வளரும் நாடுகள் பட்டியலிலிருந்து வளர்ந்த நாடுகள் பட்டியலுக்கு உயர்த்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அந்த உன்னதத் தலைவனுக்கு நினைவாஞ்சலிகள்!!

Thanks to Mr. Asif Meeran in maraththadi.com

2 comments:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Placa de Vídeo, I hope you enjoy. The address is http://placa-de-video.blogspot.com. A hug.

Mohamed Yakoob said...

அருமையான பதிவு. பல கோடி நன்றிகள்..

ஷேக் ஸயத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் வாழ்க்கை வரலாறு எத்தனை முறை படித்தாலும் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும். அவர் வாழ்க்கையில் செய்த முயற்சிகள் மற்றும் பல முடிவுகளின் காரணமே இன்றைய அமீரகத்தின் தோற்றம். எனவே தான், ஷேக் ஸயத் பின் சுல்தான் அல் நஹ்யான் "அமீரகத்தில் அப்பா" என அழைக்கப்டுகிறார்.

உங்கள் இணையதளத்தின் வாயிலாக "ஷேக் ஸயத் பின் சுல்தான் அல் நஹ்யான்" பற்றி பல விவரங்கள் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. அதுவும் குறிப்பாக தமிழ் மொழியில். இதே போல் சில தமிழ் மக்கள் பயனடைவதற்காக அமீரக செய்திகள், முக்கிய மற்றும் பயனுள்ள தகவல்களை "UAE Tamil Web" வாயிலாகவும் சில நேரங்களில் தெரிந்துகொள்ள முடிகிறது.

Links - UAE News in Tamil

உங்களை போன்றவர்கள் சேவை தமிழ் மக்களுக்கு மிகவும் தேவை.