Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, January 17, 2009

பாபா.. எங்கள் பழனி பாபா...




பாபா.. எங்கள் பழனி பாபா...

பாபா...
மனிதநேயத்தை
எங்களுக்கு
அறிமுகம் செய்து
வைத்த ஆசானே!
மத நல்லிணக்கத்தை
மதிக்கச்சொன்ன மகானே!

மனிதரில் புனிதனே!
மங்காத சுடரொளியே!
பகுத்தறிவை எமக்கு
போதித்த அறிவொளியே!

உண்மைக்கு
குரல் கொடுத்தாய்!
உரிமையைக் காக்க
உயிரையே கொடுத்தாய்!

நீ
மொழியால் தமிழன்
இனத்தால் திராவிடன்
தேசத்தால் இந்தியன்
மார்க்கத்தால் முஸ்லிமென்றும்

என்னைச்
சிறையில் அடைத்தாலும்
சிலுவையில் அறைந்தாலும்
சித்திரவதை செய்தாலும்
சீரான மார்க்கம் விட்டு
சிறிதளவேனும் மாறேனென்று
மார்தட்டிச் சொன்னாயே!

எங்களுக்கு
தளபதியாய் முன்னின்று
களம் அமைத்துக் கொடுத்தாய்!
கலங்கரை விளக்காக
நலம் பல புரிந்தாய்!

நாங்கள் உன்னை
பாபா.. பாபாவென்றே
பாசத்துடன் அழைப்போம்..!
நீ எங்களை
அத்தா.. அத்தாவென்றே
அன்பொழுக அழைப்பாய்!

நூற்றி இருபத்தாறு முறை - நீ
சிறை சென்றாய்;
அத்தனை முறையும்
நீதான் வென்றாய்!
சட்டம் உன்னிடம் மட்டும்
சரண் அடைந்தது!

நான்
சிறையில் உன்னைச்
சந்தித்த நாளை
மறக்கவே இல்லை!
பழங்கள் கொண்டு வந்தேன்..
பணியாரம் செய்து வந்தேன்...
வெளிநாட்டிலிருந்து
வாசனை திரவியமும்
வாங்கி வந்தேன்!

ஆனால் நீயோ...
செடிகள் கொண்டு வா
பறவைகள் வாங்கி வா
சிறையின் அறையைச்
சுத்தம் செய்திட
சுண்ணாம்பு கொண்டுவா என்றே
ஒவ்வொறு முறையும்
ஒவ்வொன்றாய் கோட்பாய்...!

எத்தனைச் சிறைகள்...
அத்தனையிலும் நீ
பதியம் வைத்த
கன்றுகளெல்லாம் - இன்று
மரங்களாய்...
விருட்சங்களாய்...
உன் நினைவுச் சின்னங்களாய்...
நிழல் தருகின்றன...!

உன்னை வரவேற்க
ஒவ்வொரு சிறையும்
ஆவலாய்க் கத்திருக்கும்!
ஆம்...!
அவைகளுக்குள் - நீ
அடைபடும் நாள் - அவைகளுக்கு
போகிப் பண்டிகை நாள்!
அதற்கு அடுத்தநாளில் - வெள்ளைச்
சுண்ணாம்புச் சட்டையை
சுவர்கள் போட்டுப் பார்க்கும்!

கிழவனின் பொக்கை வாயாய்ச்
சிரிக்கும் தரையின் குழிகளைச்
சிமெண்ட் கலவையால்
சரிசமம் செய்வாய்!
உனக்குத்தான் - எதையும்
சரிசமம் ஆக்குவதில்
சலிப்போ வராதே!

பழையன கழிந்திடவும்
புதியன புகுந்திடவும்
பாதை அமைத்துத்
தந்தவர் நீங்கள்!
சிறைச் சாலையில் - உன்
அதிகாரம் எப்போதும்
கொடிகட்டிப் பறக்குமே!

வெளியில் நீ பேசினால்
கருஞ் சட்டைப்படை
ஆவலாய் கேட்கும்!
உள்ளே பேசினால்
காவலர் படையும்
ஆவலாய் கேட்கும்!

கைதிகள், காவலர்கள்
பார்வையாளர்கள் என்ற
பாகுபாடு பார்க்காது
போதனைகள் செய்வாய்!

நீ
பாடம் எடுக்கும்
பாணியே அலாதிதான்!
கழுவும் மீனில்
நழுவும் மீன்போல
பொடி வைத்துப் பேசுவாய்!
வெடியாய் வெடிக்கும் - உன்
வார்த்தைகளுக்கு
விடை தெரியாத
விலங்குகள் கூட்டம்
வெறிப்பேச்சு என்றே
விளக்கம் கொடுக்கும்!

கலவரம் வருமென்றே
காவிக்கூட்டமும்
காக்கிக் கூட்டமும்
ஊரையே மிரட்டும்...
உளுத்தரைக் கூட்டும்...!

உன்னால் கலவரம்
வந்ததே இல்லையென்ற
உண்மை விவரம்
உலகே அறியும்!

எங்களுக்காக...
எவரையும் எதிர்ப்பாய்..!
எங்களைக் காக்க
உன்னையே கொடுப்பாய்!

எங்களை எதிர்க்க
எவருக்கும் பயம்..!
அது
அந்தக்காலம்..!

சிறைகளை நாங்கள்
சந்தித்து உண்டு!
வெளியெ நாங்கள்...
உள்ளே நீ...!

ஆனால் - இப்போது
உன் தம்பிகள் யாவரும்
உள்ளே... சிறைக்குள்ளே...
நம் தலைவர்கள் (?) யாவரும்
உல்லாசமாக... எதிரிகளோடு
சல்லாபம் செய்தபடி...
சந்தோசமாக...

போனால் போகட்டும்...
போய்த் தொலையட்டும்..
பிணம் தின்னும் கழுகுகளாலே
பயனொன்றும் இல்லை...
பேடிகள்.. கேடிகள்..
பிழைத்துப் போகட்டும்.. பாபா...!

பாபா...!
உன்னை
வீழ்த்தி விட்டதாய்
வெகுசிலர் நினைக்கலாம்!
ஒலி, ஒளிப் பேழைகளில்
ஒலித்துக் கொண்டும்
எங்கள் நெஞ்சில்
வாழ்ந்து கொண்டும் - நீ
இருக்கின்றாய் என்பதை
எத்தனைப் பேர் அறிவர்?

துக்கம் தொண்டையை
அடைக்குமு போதும்...
தூங்கிட உயிர்
மறுக்கும் போதும்...

கோழைகளைக் கண்டு மனம்
ஒல்தித்தெழும் போதும்...
நன்மை செய்ய
நினைக்கும் போதும்...
உண்மையைச் சொல்லி
விளக்கும் போதும்...

உந்தன் நினைவுகள்
எந்தன் நெஞ்சினில்
ஒவ்வொரு நாளும்...!
ஒவ்வொரு நாழிகையும்...!

பாபா...
வீரனாக வீழ்ந்து
வெற்றிக்கு வழிகாட்டினாய்..!

பாபா - நீ
விளைவித்த
விதைகள் நாங்கள்!
வீரமிக்கவர்கள்..
வீரியமிக்கவர்கள்...
விவேகமிக்கவர்கள்...!

பாபா - நம்
பசும்பொன் சொன்னாரே!
"விவேகமில்லாத வீரம்
முரட்டுத்தனம்!
வீரமில்லாத விவேகம்
கோழைத்தனமென்று!"

வீரத்துடனும் விவேகத்துடனும்
உன் வழிப்பாதையில்
வீழ்வது நாங்களெனினும்
வாழ்வது நன் சமுதாயமாக இருக்கட்டும்!

விரைவாய் வருவோம்..
விரைவில் வருவோம்...
வெற்றிக்கனியைப் பறித்துக்கொண்டு!

விண்ணும் மண்ணும் அதிர...
வானவர்கள் வாழ்த்தொலி முழங்க...
வரவேற்கத் தயாராய் இரு பாபா...!

ஜனவரி 28, 2002 அன்று பழனிக்கு அருகில் உள்ள புது ஆயக்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பழனி பாபாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில் அவரது மண்ணறையில் அமர்ந்து இனியவன் ஹாஜி முஹம்மதுவால் எழுதி வாசிக்கப் பட்ட கவிதாஞ்சலி.

Wednesday, November 12, 2008

முதிர்க் கன்னிகள்

நாங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!

எங்களில்
இலக்கிய நயமிருந்தும்
இலக்கண முறையிருந்தும்
கைக் கூலி
கொடுக்கப் பண மில்லாத
குறையினால்
படிக்கப் படாமல்..
கைப் பிரதியாகவே..
காலமெல்லாம்...!

எங்களை
விலை கொடுத்து
வாங்கிப் பிரித்து
வார்த்தைகளில்
விழும் அமுதம் பருகி
வாக்கியங்களின்
இன்பம் சுவைத்து

முழுவதும் படிக்காமல்
அவசர... அவசரமாய்...
முன் அட்டையில் மயங்கி
வாடைகைக்கு கிடைக்குமா - என
வாசகன் கேட்கிறான்?

என்ன சொல்வது..
ஏளனம் செய்வதில்
எவர்க்கும் சளைத்தவனல்லவே
எந்தமிழ் வாசகன்!!!

எழுதியவரே எம்மை
ஏரெடுத்துப் பாராதபோது
வீணில் வாசகனைக் குறைகூறி
விளையும் பயன் என்ன..??

பெற்றோரே...
மற்றோரே...

கரையான் அரித்து
கரைந்து போகுமுன்னே..
காமுகனின் கோரப்பசியால்
களங்கப் படுமுன்னே...
கரையேறத் துடிக்கின்றோம்..
காப்பாற்ற அழைக்கின்றோம்..

இன்னும் நங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!!!

எண்ணம்: இனியஹாஜி, சிந்தனை: நவம்பர் - 2008, தோஹா - கத்தார்

Tuesday, November 11, 2008

மனிதா மனிதா



மனிதா.. நீ...
மாறுவ தெப்போது?

மதமென்ற பெயரால்
மிருக வெறியோடு
மாற்றானின்
மதத்தையா அழிக்கிறாய்?
மனிதர்களை..
மனிதப் புனிதர்களை...

நீ இந்த
மண்ணுக்கு மண்ணனாகி
மகிழ்வதற்கு - நாளும்
மண்ணின் மைந்தரல்லவா
மடிகின்றார்...!

இனம்.. மதமென்று
இனம் பிரித்துப் பாராது
இந்தியனாய்ப் பார்...
இன்னும் மேலே
மனிதனென்றே பார்...!

மழையைப் பார்..
மலரைப் பார்..
காற்றைப் பார்..
கடலைப் பார்..
விண்ணைப் பார்..
மண்ணைப் பார்..
இறைவன் படைப்பின்
இரகசியம் பார்..!!

வெடி குண்டும் அணு குண்டும்
வேண்டாமே நமக்கு...
அன்பு போதும் - அதனால்
அகிலத்தையே வெல்லலாம்!!!

- கோவைக் கலவத்தின் போது எழுதியது.

மழையா மனிதனா



விடியல் பொழுதில்
வயல்வெளி சென்றேன்..
பசும் பயிர் காய்ந்து
பாளம் பாளமாய்...
மனசும் தான்..!

மண்ணும் மழையும்
மாறிய காரணம்..??
மனிதன் தான்..!!

கட்சிகளுக்கும்
ஆட்சிகளுக்கு மிடையாயான
நீயா.. நானா.. போட்டியில்
காவிரி நீர் வரவில்லை...
மாறாக...
கண்களிலிருந்து
ஊற்றுக்கண்...!

அட.. அடடா..
ஊருக்கே
உணவு தந்தவன்
உணவுத் தட்டுடன்...
கஞ்சித் தொட்டிக்கு முன்பே
உணர்வு இழந்தவனாக...!

மழையே... மழையே...
மனிதன் தவறு செய்தான்
மன்னிப்பாயாக...

மண்ணை முத்தமிட
மறவாமல் வருவாயா??
ஏழைகளாகிய எங்களின்
மனங்களை மகிழச்செய்வாயா???

எண்ணம்: இனியஹாஜி, சிந்தனை: ஆயங்குடி - 2002

Friday, November 7, 2008

எங்கள் இந்திய தேசம்!




இனம், மொழி, வழி பலவாயினும்
இணைந்தே வாழும் இந்திய தேசம்..
இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள்...
இணை பிரியாத எங்கள் தேசம்!

விந்திய மலை போல் வீழ்ந்திடாத
வீரமும், வலிமையும் மிகைத்த தேசம்..
மண் வளமும், மனித வளமும்
மிகத்தே நிற்கும் மாண்புறு தேசம்!

வேற்றுமையில் ஒற்றுமை காணும்
வித்தியாசமான வியப்புறு தேசம்..
ஆற்றுமை, ஆற்றாமை இருந்திடினும்
இயல்பாய் வாழும் இன்புறு தேசம்!

கட்சிகள், காட்சிகள் கலைந்திருந்தாலும்
காண்போர் கண்படும் களிப்புறு தேசம்..
கனவுகள் நனவுகளாய் ஆகாவிடினும்
கனிந்தே வாழும் விழிப்புறு தேசம்!

நதிகள் இணைந்து, நன்மைகள் வளர்ந்து
மதவெறி மாய்ந்து, மனிதம் மலர்ந்து..
ஏழ்மை நீங்கி.. தேசம் ஏற்றம் பெற்றிட
எடுப்போம் சபதம்.. இன்றே நாமும்...!!!

-எண்ணம்: இனியஹாஜி, இடம்: சோழபுரம், நவம்பர் - 2001

Saturday, July 5, 2008

சரித்திரம் சரிகிறதே!


காந்தி பிறந்தமண்
இரத்தக்கறை படியக் கிடக்கிறதே!
சாந்தி தவழ்ந்த மண்ணின்
சரித்திரம் சரிகிறதே!

தியாகத் தலைமுறையை
தீப்பந்தம் மறைக்கிறதே!
அபாயம் நீங்கி - நல்ல
அமைதியை மனம் நாடிடுதே!

கடவுளின் பெயராலே
கலகங்கள் நடக்கிறதே!
மதவெறி தலைதூக்கி
மனிதநேயத்தை அழிக்கிறதே!

விஞ்ஞான இரகசியங்கள்
விலைபேசப் படுகிறதே!
மெய்ஞான மடங்களிலே - தேசம்
மண்டியிட்டுக் கிடக்கிறதே!

அரசியல் கழிசடைகளால் - நாடு
அசிங்கமாகிப் போனதே!
சரித்திரச் சின்னங்கள்
சரிக்கப்பட்டு கொண்டிருக்கிறதே!

விருப்பு வீழ்கிறதே!
வெறுப்பு வளர்கிறதே!
அகிம்சை தளர்கிறதே!
இம்சை துளிர்க்கிறதே!

ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது

Thursday, June 19, 2008

புறப்படு சகோதரா! புறப்படு!

பின்பற்ற வேண்டிய சமுதாயம்

பின்னோக்கி நிற்கையில்

முன்னணியில் போராட

நான் மட்டும் எப்படி?


பேர் பெற்ற சமுதாயம்
நோய் பட்டுக் கிடக்கையில்
நிர்வாகம் சீராக்க
நான் மட்டும் எப்படி?

எண்ணூறு ஆண்டு காலம்
இந்தியாவை ஆண்ட குடி
பாழ்பட்டுக் கிடக்கையில்
நான் மட்டும் எப்படி?

இப்படி பொறுப்பற்ற பதில் விடுத்து
சுறுசுறுப்பாய் களம் காண
புறப்படு சகோதரா! புறப்படு!

வீரத்தின் விளைநிலமே!
விவேகத்தின் இருப்பிடமே!
மனித நேயம் காக்க...
புனித மார்க்கம் ஓங்க...
புறப்படு சகோதரா! புறப்படு!

உன் வேகம் கண்டு
துரோகிகளும் நயவஞ்சகர்களும்
புறமுதுகிட்டு ஓடிடட்டும்!
புறப்படு சகோதரா! - புழுதி
பறக்க புறப்படு!

சிறுபான்மை நாம் என்ற
சிந்தனையை மறந்துவிடு!
பாறாங்கல்லையும் சிற்றுளி
பிளந்திடும் என்பதை மனதிலிடு!

சிறுபான்மை பெரும்பான்மையை
வென்ற வரலாறு நம் பத்ருகளம்!
வெற்றி அல்லது வீரமரணம்
வாழ்க்கையே நமக்குப் போர்க்களம்!

நம் சகோதரிகள் மானமிழப்பதைக் கண்டு
கொதித்தெழ வேண்டாமா?
நம் குழந்தைகள் அனாதைகளாவதை விடுத்தும்
தடுத்திட வேண்டாமா?

நம் செல்வங்கள் சூறையாடப்படுவதற்கு
முடிவு கண்டிட வேண்டாமா?
பொறுத்தது போதும் சகோதரா!
புயலாக பொங்கி எழு!

குமுறும் எரிமலை
வெடித்துச் சிதறினால் - இந்தப்புவி
தாங்காது என்பதை
மாபாதகர்களுக்குப் புரிய வைப்போம்!


பொறுத்தவன் பொங்கி எழுந்தால்
அடக்குபவன் அதிகாரமிழந்து போவான்
என்பதை - இந்த அநியாய
ஆட்சியாளர்களுக்கு அறிய வைப்போம்!

தீயோரை எதிர்க்கும்
போர்குண மிக்கவர்கள் நாம்!
நல்லோரை மதிக்கும்
நற்குண மிக்கவர்கள் நாம்!

இனிய மார்க்கத்தின் வழி நின்று
மனித குலத்திற்கு தீங்கு செய்வோரை
மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்
புறப்படு சகோதரா! புறப்படு!


ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது

மனம்

நான்
வாழ்வில் சில பொழுதில்
வீழ்ந்து விடுகின்ற பொழுது
சிரிக்கின்றது சிலரது மனம்
ஏளனத்துடன்..
சிறகொடிந்த பறவையாகிவிட்டேனென...

அடுத்த பொழுதில் ‍மீண்டும் நான்
சிரமம் தவிர்த்து..
சிலிர்த்தெழும் பொழுது
சந்தோசப் படுவதாக‌
காட்டுதலுடன் அவர்கள்...

எல்லா நிலையிலும் என்னுள்
அணையாமல் எரியும் நெருப்பின்
ஆழம் அறியா அவர்களை நினைத்து
தினமும் சிரிக்கிறது என் மனம்...