Wednesday, November 12, 2008

முதிர்க் கன்னிகள்

நாங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!

எங்களில்
இலக்கிய நயமிருந்தும்
இலக்கண முறையிருந்தும்
கைக் கூலி
கொடுக்கப் பண மில்லாத
குறையினால்
படிக்கப் படாமல்..
கைப் பிரதியாகவே..
காலமெல்லாம்...!

எங்களை
விலை கொடுத்து
வாங்கிப் பிரித்து
வார்த்தைகளில்
விழும் அமுதம் பருகி
வாக்கியங்களின்
இன்பம் சுவைத்து

முழுவதும் படிக்காமல்
அவசர... அவசரமாய்...
முன் அட்டையில் மயங்கி
வாடைகைக்கு கிடைக்குமா - என
வாசகன் கேட்கிறான்?

என்ன சொல்வது..
ஏளனம் செய்வதில்
எவர்க்கும் சளைத்தவனல்லவே
எந்தமிழ் வாசகன்!!!

எழுதியவரே எம்மை
ஏரெடுத்துப் பாராதபோது
வீணில் வாசகனைக் குறைகூறி
விளையும் பயன் என்ன..??

பெற்றோரே...
மற்றோரே...

கரையான் அரித்து
கரைந்து போகுமுன்னே..
காமுகனின் கோரப்பசியால்
களங்கப் படுமுன்னே...
கரையேறத் துடிக்கின்றோம்..
காப்பாற்ற அழைக்கின்றோம்..

இன்னும் நங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!!!

எண்ணம்: இனியஹாஜி, சிந்தனை: நவம்பர் - 2008, தோஹா - கத்தார்

No comments: