Tuesday, November 25, 2008

பனுவலியல் அராஜகத்திற்கு எதிராக சாருநிவேதிதாவின் புதிய நாவல்



Pathivu Toolbar ©2008thamizmanam.com


பனுவலியல் அராஜகத்திற்கு எதிராக சாருநிவேதிதாவின் புதிய நாவல் - பகுதி-3
சாருநிவேதிதாவின் முதல் நாவலான 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும்' நாவலுக்கு 1990- பறை இதழில் எழுதிய விமர்சனம் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

3. பனுவலில் எதிர்கொள்ளப்படும் பாலியல் அரசியல் (*)
நாவலின் பகுதி இரண்டில் நாவலை எழுதும் சூர்யாவின் எரிக்கப்பட்ட பகுதிகள் என கிளிங்கோவிட்ஸால் நினைவு கூறப்படும் பகுதிகள் (பக். 100-148) சூர்யா என்ற நவீன எக்ஸிஸ்டென்ஷியலிச மற்றும் அறிவார்ந்த சிந்தனையாளனின் பால்ய கால இருட் பகுதிகள் (regime of silence) வெளிக்கொண்டுவரப்படுகின்றன. அவைகளை பட்டியலிடுவோம்.
1. ஓரினப் பணர்ச்சி - தனபால்-சூர்யாவுக்கு இடையில் நடைபெறுவது. 2. சுயமைதூனம் 3. வாய்வழிப் பாலுறவு - செட்டடியாரிடம் 15 வயது பெண், சூர்யாவிடம் புசாரி.4. உடலுறவு - நிறைய முறையற்ற, “தேவடியாள்களு”டன், உறவினர்களிடையோன 5. தூக்கத்தில் ஸ்கலிதமாதல் 6. யோனியில் முத்தமிடல் 7. துர்க்கையின் தலையில் மூத்திரம் பேய்தல்.

இவ்வுறவுகள் எல்லாம் சூர்யா என்ற அறிவுஜீவியின் நினைவிலி மனப்புலத்தை கடடமைக்கிறது. இளம் சூர்யாவின் உலகம் வர்க்கம்சாரா ஓரப்பிரிவினரின் வாழ்க்கையும், இருத்தலுமே ஆகும். நாவலின் முதல்மற்றும் இரண்டாம் பகுதி இத்தகைய “லும்பன்” பகுதியினரின் தோற்றம், வளர்ச்சி, இருத்தல் பற்றியே பேசப்படுகிறது.
சூர்யாவின் அப்பா கிருஷ்ணசாமி என்கிற தெலுங்கு பேசும் நாயுடுவின் எட்டு சகோதர, சகோதரிகளும் (கடைசிச் சகோதரியைத் தவிர) வீட்டை விட்டு சூர்யாவின் தாத்தாவால் விரட்டப்படுகிறார்கள். சமூகத்தின் பொருளியல் கொடூரங்களை எதிர்கொள்ள முடியாமல் சிதைவுற்ற வாழ்க்கைமுறையை ஏற்று வாழ்ந்துவிட்டு போகிறார்கள்.
சூர்யாவின் அம்மா பார்வதியின் 9 சகோதர, சகோதரிகளும். அதே பொருளியல் கொடூரங்களுடன் போராடி, குடும்பம் சிதைந்து “லும்பன்” வாழ்க்கையை நோக்கி நகர்த்தப்படுகிறார்கள்.

அடியாட்கள், குற்றவாளிகள், பாலியல் வேட்கையாளர்கள், பாலியல் பிறழ்ந்தவர்கள், போதை மருந்து கடத்தல், உட்கொள்ளல்... ஆகியவர்களாக சிதைக்கப்படுகிறார்கள். இவர்களும் சேர்ந்துதான் அக்காலத்தைய சமூக வரலாற்றை எழுதுகிறார்கள்.
இச்சிதைவுககு நாம் அனைவருமே காரணம்தான். இது ஏதோ சமூக அவலம் என்று புறக்கணிக்கக் கூடியதல்ல. ஏனென்றால், இச் சிதைவுகளினால் சமூக அமைப்பு உடைந்து விடாமல் சமநிலையை காப்பவர்கள் நாம் எல்லோரும்தான். இத்தகையவர்களை அவலத்திற்குரியவர்களாகவும், குற்றவாளிகளாகவும் இடம்மாற்றம் செய்வதன் மூலம் சீரழிவிற்கான குற்ற உணர்விலிருந்து விடுபட்டுவிடுகிறோம் நாம் (**). இதன் பின் புலத்தில்தான் பாலியிலின் அரசியல் செயல்படுகிறது.
என்பதை அறிந்துகொள்ள வேண்டும், பாலியல் என்பதும் அரசமைப்பின் அதிகாரத்தினைக்கொண்ட கட்டமைக்கப்பட்ட ஒரு கருவி என்பதை உணரவேண்டும். பாலியலுக்கும், மதத்திற்கும் உள்ள எதிர்மறை உறவை உடைத்து வாசிபப்தன் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்.
மதமும், பாலியலும் இரட்டைமுரண் எதிர் அமைப்புகளைக்கொண்ட அதிகாரம் செலுத்தும் கருவிகளாக செயலபடுகின்றன.
அதிகாரத்துடன் மதம் நேர்மறையான உறவையும், பாலியல் எதிர்மறையான உறவையும் கொண்டிருக்கின்றன. மதம் நேரடியான அறமதிப்பீடுகளைக் கொண்டு, பாவத்தை அறிக்கையிடல், கடவுளிடம் பாவமன்னிப்புக்கோரல், பரிகாரம் செய்வதன்மூலம் கடவுளை சாந்தப்படுத்துதல்... போன்றவற்றின் மூலம் மனிதனின் குற்றம் சார்ந்த நேரடியான அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது.
பாலியல் எதிர்மறையான அறமதிப்பீடுகளைக் கொண்டியங்குவதால் மனிதனின் குற்றம் சார்ந்த உணர்வுகளை ஒடுக்கி பதுக்குவதன் மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது. மதம் பாலியலுக்கு எதிராக கட்டப்பட்டு நிலைநிறுத்தப்படுவதால் ஆதிக்கத்தின் மையக் கண்ணியாக பல நூற்றாண்டுகள் இருந்து வந்துள்ளது.
மதத்தின் ஆதிக்கத்தை எதிர்க்ககும் மனிதன் பாலியல் பிறழ்ச்சிகள் மூலம் அதை சாதிக்க முனைகிறான்.
நாவலில் சூர்யா சுயமைதூனம் செய்யத் தேர்ந்த இடங்கள் இருண்ட பிள்ளையார் கோவில், பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் சுடுகாடு, புனிதமானதாகக் கருதப்படும் துளசிங்கப்பெருமாள்கோவில்... இவை மதம், மரணம் மற்றும் புனிதம் பற்றிய கருத்துத் திணிவுகளுக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது.
‘அச்சம்‘ மற்றும் ‘குற்றம்‘ பற்றிய உணர்வுகள் மனித மனத்திற்கள் கட்டப்பட்ட ஆதிநிலை உணர்வுகள் என்பதும், அது சமூகத்தின் மையத்தில் செயல்படும் குற்ற உணர்வு, அச்சம் அகியவற்றின் வெளிப்படலே என்பதையும் சுட்டகிறது.
சூர்யாவின தங்கை ஆர்த்தி பேய் பிடித்து, மந்திரிக்கப்பட்டுள்ள நிலையில் தூய்மை காக்கவேண்டும் எனக் கூறப்பட்டபோது.. சூர்யாவுக்கு இரவு ஸ்கலிதமாகிறது.
ஒன்றைச் செய்யக்கூடாது என எதிர்மறை ஒடுக்குதல்கள் அதை செய்யும் தூண்டதலை நினைவிலி மனப்புலத்தில் ஏற்படுத்தி அதற்கு எதிராக இயங்க வைத்துவிடுகிறது.

பேய்களுக்குப் பயப்படும் சூர்யா துர்க்கையின் தலையில் மூத்திரம் பேய்கிறான். துர்க்ககைக்கும், பேய்களுக்கும் இடையிலான நுட்பமான வித்தியாசம் முக்கியமானது. பேயின் ஒரு தெய்வீக வடிவமாகவே துர்க்கை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
பேய் அமானுஷ்யத் தன்மைகொண்டதாகவும், துர்க்கை தெய்வத் தன்மைக் கொண்டதாகவும் ஒரு முரண்நிலை நிலவுகிறது. பேயும், தெய்வமும் ஒரு நாணயத்தின் இரண்ட பக்கங்கள், ஆனால் ஒரே நாணயத்தில்தான் இருக்கின்றன. இப்படி ஒரு சமநிலை மதத்தால் காக்கப்படுவதனால்.. பேய்க்குப் பயம் உள்ளவன், துர்க்கையிடம் பயம் இல்லாதவனாக இருக்கிறான்.
ஏதோ ஒருவகையில் மதத்தின் அதிகாரத்திற்குள் பயம் சார்ந்த உணர்வகள் மூலம் மனிதர்கள இருத்தி வைக்க முடிகிறது.
பூசாரி என்ற புனித பிம்பம் (பார்ப்பான்) சூர்யாவிடம் தொண்டையில் முடிவளர்வதாகக் கூறி வாய்வழிப் பாலுறவு கொள்கிறான். வயதான செட்டியார் சூர்யாவின் பாலியல் ஆலோசகராய் உள்ளார்.
தாய் உறவுடையவர், மகன் உறவுடையவரிடமும், தந்தை உறவுடையவர் மகள் உறவுடையவரிடமும்.. முறையற்ற உடலுறவுகள் நிறைய பேசப்படுகின்றன.
இவை எல்லாம் சேர்ந்து கட்டமைக்கப்பட்டவன்தான் இன்றைய அறிவுஜீவி சூர்யா. இப்படிப் பதுக்கப்பட்ட மௌனங்களை உடைத்து பேச வைப்பதன் மூலம், மனிதன் பாலியல் ஒடுக்குதல்களிலிருந்து விடுபட்டு விடுதலைக்குரிய போராளியாகிறான்.
ஆதிக்கத்தின் சகல துறைகளையும் எதிர்த்து கலகம் செய்பவனாக கட்டமைக்கப்படுவான். பாலியல் வேட்கை, பிறழ்ச்சி பற்றிய உண்மையான அறிக்கையிடல்கள் (confessions) சொல்லாடல்கள் வெளிப்படுத்துவதன்மூலமே இன்றைய ஆற்றல்வாய்ந்த ஆதிக்கவெறி பிடித்த வாழ்க்கையை உடைத்தெறியமுடியும்.

இத்தகைய நிகழ்வுகளே இல்லை என்பது போல மெளனித்து இருப்பவர்கள் அதிகாரத்தின் முகமூடிகளை அணிந்துகொண்டு மனித உடல்களை அடக்கியாள்வதில் இன்பம் அடைபவர்கள். இவர்களே நாளைய பாசிசத்தின் கருத்துருவத்தூண்கள்.
இத்தகைய நிகழ்வுகளின் இருப்புகள் சமூகத்தின் அடித்தளத்தில் சலனமுறுவதை அனைவரும் அறிந்தே உள்ளனர். அவ்வகையில் இந்நாவல் பெரும் பாயச்சலைச் சாதித்துள்ளது.

இந்நாவலை எதிர்கொண்டு முகஞ்சுளிக்கும் 'முற்போக்காளர்களை'க் கொஞ்சம் கவனிப்போம். இந்நாவலின் பாலியல் கட்டுமானங்கள், மதவாதிகள், ஒழுக்கவாதிகள், அழகியல்வாதிகள் ஆகியோரை ஒருசேரத் தாக்குகிறது. இதை புரிந்துகொள்ள முடியாத முற்போக்காளர்கள் தாங்களும் பாலியலை பொறுத்தவரை அதே மதவாதிகள், நல்லொழுக்கவாதிகள் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

இப்படிப் பாலியல் பற்றி நாம் பேசுவதால் 'இவர்கள் அனைவரும் பாலியல் வக்கிர உணர்வுகள் உடையவர்கள்' என்ற மலினமான கருத்திற்குச் செல்பவர்கள் ஏற்படுத்தும் மாயையை அழிப்பதே நாவலின் அடுத்தமைந்த தளமாகும்.
இன்று அதிகாரப் பரவலைச் செய்யும் கருத்துருவ எந்திரங்களுடன் துணைக் கருவிகளாய் செயல்படுபவர்களே இந்த இணைக்கலாச்சார மாயையை ஏற்படுத்தும், சிறுபத்திரிகையாளன், இலக்கியவாதி, நாவலாசிரியன் ...etc.. etc.. ஆவார்கள். இவர்கள் ஏற்படுத்தும் மாயையை அழிப்பதில் நாவல கவனம் செலுத்தும் தளத்திற்கு செல்வோம்.

குறிப்புகள்.
(*) பாலியல் அரசியல் (Sexual Politics) பற்றி தமிழில் முதன்நிலை அறிமுகமற்ற சூழலில் இந்நாவலும் இக்கட்டுரையும் வெளிவருகிறது. பாலியலுக்கும், அரசயலுக்கும் இடையிலான உறவ பற்றியும், பாலியல் ஒரு விஞ்ஞானம் என்றரீதியில் பல ஆய்வுகளுக்கு உட்பட்டிருப்பது பற்றியும் நிறைய பேசலாம். ஆனால், கட்டுரையின் எல்லைக்கு வெளியே இருப்பதால் அது குறித்து மேலதிக விளக்கம் இல்லை.
பிராய்டு தொடங்கி இன்றைய பெண்ணிலைவாதிகள்வரை பாலியல் அரசியல் பற்றி கருத்துகளை ஆராய்ந்துள்ளனர். இங்கு பாலியலுக்கும், அதிகாரத்தழற்கும் இடையிலான உறவு பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் மிஷேல் ஃபூக்கோவினுடையவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

(**) 1960-களில் ஜெர்மனில் வெளிவந்த ஹ்யூபட் ஃபிக்ட் எழுதிய 'டீ பலேட்டா' என்ற நாவல் குறித்து 'மார்ஷல் ரைஷ்-ரானிக்கி' எழுதியுள்ள விமர்சனம் ஒன்று ஜெர்மானிய புத்திலக்கியம் என்ற நூலில் வெளிவந்துள்ளது. (1981 தென்மொழிகள் புத்தக நிறுவனம் - சென்னை) அந்நாவலில் நாயகன் யக்சி கூறுகிறான் "அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாலும், கொலை, பொய்மை, கொள்ளை, சிததிரவதை, கூட்டாக கொன்று குவித்தல், பொய்ச்சான்று புகலுதல், நீதிபதி பொறுப்பை தவறாக பயன்படுத்துதல்,ஆசிரியர் பொறுப்பை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாலும் குற்றவாளி வர்க்கத்தில் சேராமல் தப்பித்துக் கொண்டவர்களை மனதில் கொண்டு பார்த்தால், குற்றவாளி வர்க்கத்தில் சேர்ந்திருபப்தே பெரும் கெளரவம் என்று தோன்றக்கூடும்" (பக். 384)

(அடுத்தது நிறைவு பகுதி) -ஜமாலன் (பறை-1990.)
image : CRANACH, Lucas the Elder - Adam and Eve - 1528
இடுகையிட்டது ஜமாலன் நேரம்
document.write(tamilize('11/26/2008 09:34:00 AM'))

லேபிள்கள்: , , ,

No comments: